மின்சாரம் எமது வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும். மேலும் மின்சாரம் இல்லாது எம்மால் வாழ முடியாது. எனவே மின்சாரத்தினை சேமிப்பது மிகவும் முக்கியமானதாகும். இங்கே வீட்டில் எவ்வாறு மின்சாரத்தினை சேமிக்க முடியும் என்பது தரப்படுகின்றது.
சாதாரண மின் குமிழ்களுக்குப் பதிலாக, நீங்கள் நட்சத்திர குறியீடு இடப்பட்ட சி.எப்.எல் (CFL) மின் குமிழிற்கு மாற்றுவீர்களாயின், அவ் மின் குமிழின் ஆயுட் காலப்பகுதியினுள் உங்கள் மின்சாரத்திற்கான செலவில் ரூபா 1000 இற்கு மேலதிகமாகச் சேமிக்க முடியும். மேலும் பாவனை ஒளியினை அதிக ஆயுட்கால மணித்தியாலங்களும் (சி.எப்.எல் “CFL” 8000 மணித்தியால ஆயுட்காலம், சாதாரண குமிழ்கள் 750 முதல் 900 மணித்தியால ஆயுட்காலம்), மூன்று அல்லது நான்கு மடங்கு பிரகாச திறனையும் பெற முடியும். எனவே நாளாந்த பாவனை மூன்று மணித்தியாலங்களிற்கு மேற்ப்பட்ட மின் குமிழ்களை மாற்றுவதிலிருந்து ஆரம்பியுங்கள்.
மின் குமிழ்களைத் தூய்மையாக வைத்திருங்கள் !
தூசி மற்றும் அழுக்குகள் படிவதிலிருந்து உங்கள் மின் குமிழ்களை தவிர்த்து தூய்மையாக வைத்திருங்கள். தூய்மையான நிலையில் காணப்படும் மின் குமிழ்கள் அழுக்கடைந்த மின் குமிழ்களிலும் கூடுதல் பிரகாசத்தினை வழங்கும்.
பிரகாசத் தன்மையினை முகாமைத்துவம் செய்யுங்கள். !
வாசித்தல், சமைத்தல் போன்ற அருகில் மின்னொளி தேவையான வேலைகளுக்கு, பிரகாசான மின் குமிழ்களை அல்லது பணி மின்ஒளியூட்டல் முறையைப் பயன்படுத்துங்கள். ஏனைய பகுதிகளுக்கு பிரகாசம் குறைந்த மின் குமிழ்களைப் பயன்படுத்துங்கள்.
இயற்கை வெளிச்சத்தினை உகந்த விதமாக பயன்படுத்துங்கள். !
இயற்கை வெளிச்சத்தினை உகந்த விதமாக பயன்படுத்தும் புத்திசாலியாக இருங்கள். இயற்கையான வெளிச்சம் பிரகாசம் மிக்கதும் இலவசமானதுமாகும். உங்கள் மேசைகள் மற்றும் வாசிப்புக் கதிரைகளை யன்னல்களிற்கு அருகில் வைப்பதன் மூலம் இயற்கை ஒளியினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதன்போது பகல் நேரங்களில் மின் குமிழை ஒளிரச் செய்ய வேண்டியதில்லை. மென்மையான நிறங்கள் ஒளியினை பிரதிபலிப்புச் செய்வதனால், அவற்றினை உங்கள் வீட்டுச் சுவர்கள், தரைகள், மற்றும் உட்புறகூரைகளிற்கு பயன்படுத்துங்கள்.
Halogen விளக்குகள் மற்றும் நகர்வினை அடையாளம் காணும் உபகரணங்களைப் (motion detectors) பயன்படுத்துங்கள். !
வெளிப்புறப்பகுதியின் பிரகாசப்படுத்துகைக்கென சாதாரண மின் குமிழிற்குப் பதிலாக halogen விளக்கினைப் பயன்படுத்துங்கள். 50 அல்லது 90 W (வலு) உடைய Halogen விளக்குகளினை அதனை விடவும் இருமடங்கு வலுக் கொண்ட சாதாரண மின் குமிழ்களிற்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும். தேவையேற்படும் பொழுது மாத்திரம் மின் குமிழினை ஒளிவடையச் செய்யும் நகர்வினை அடையாளம் காணும் உபகரணங்களைப் பயன்படுத்துங்கள். இதனால் சக்தி மற்றும் பணம் சேமிக்கலாம்.
அவற்றினை மின் அடைப்பான்களிலிருந்து (ப்ளக்) அகற்றுங்கள்.
கணனிகள், தொலைநகல் இயந்திரங்கள், தொலைக்காட்சிகள், காணொளி பதிவு இயந்திரங்கள் , இறுவட்டு இயந்திரங்கள், கேபிள் பெட்டிகள், ஒலிப்பேழைகள் என்பன பயன்முறைக்கான நிலையில் (stand by mode) இருப்பினும் சக்தியினை நுகர்வு செய்யும் என்பதனை மறவாதீர்கள். சில வகை உபகரணங்கள் மின் அடைப்பான்களில் (ப்ளக்குடன்) இணைக்கப்பட்டு பயன்படுத்தாத (off) பொழுதிலும் தொடர்ந்து சக்தியை நுகர்வு செய்யும். நீங்கள் விடுமுறையில் செல்லும் பொழுது, வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் மற்றும் அவற்றினை பயன்படுத்தாத சந்தர்ப்பங்களில் அவற்றினை மின் அடைப்பான்களிலிருந்து (ப்ளக்) அகற்றி வைப்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
சலவை இயந்திரத்தில் சரியான அளவு ஆடைகள், தூய்மையாக்கிகள் மற்றும், நீர், வெப்பநிலை.
உலர்த்திகள் மற்றும் சலவை இயந்திரத்திற்கு கூடுதல் சுமையினை ஏற்றாதீர்கள் அதன் கொள்ளளவிற்கு ஏற்ப அவற்றினைப் பயன்படுத்துங்கள். அளவுக்கதிகமான சுமை அதன் திறனைக் குறைக்கும். சலவை இயந்திரத்தில் நீரின் மட்ட கட்டுப்பாட்டினை பேணுங்கள். குறைந்த ஆடைகளின் எண்ணிக்கைக்கு சிறிதளவு நீரைப் பயன்படுத்துங்கள். கழுவும் இயந்திரங்களிற்கு நீரின் வெப்பநிலையை சரியான அளவில் பயன்படுத்துங்கள். குளிர்ந்த நீரில் கழுவுவதனால், துப்பரவு செய்வதில் பாதிப்புக்கள் ஏற்படாது. மேலும் சுருக்கங்கள் ஏற்படுவது குறைவடையலாம். தூய்மையாக்கிகளில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். அதிக அளவில் சவர்க்காரங்களின் பயன்பாடு சலவை இயந்திரத்தின் விசைப்பொறியினை (motor) கடுமையாக வேலை செய்யத் தூண்டும். மென்மையான ஆடைகளை, கறை படிந்த ஆடைகளைப் போன்று நீண்ட நேரம் கழுவ வேண்டியதில்லை என்பதனை ஞாபகத்தில் வைத்திருங்கள். எனவே அவற்றினை வேறுபடுத்திக்கழுவுங்கள் அல்லது கைகளினால் கழுவுங்கள். உலர்த்திகள் அத்தியாவசியமெனின் மட்டுமே பயன்படுத்துங்கள் இல்லையேல் சூரியஒளியில் காய விடுதல் உகந்தது. உலர்த்திகள் தானியக்க சுற்றுக் கொண்டிருப்பின் அதனைப் பயன்படுத்துங்கள். கூடுதலாக உலர்த்துதல் சக்தியை விரயமாக்குவதுடன் ஆடைகளினையும் பழுதடைய செய்யும். உங்கள் இயந்திரத்தின் திறனான செயற்பாட்டிற்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாவனையின் பின்னரும் உலர்த்தியின் பிரித்தாக்கியினை துப்பரவு செய்யுங்கள்.
ஆடைகள் அனைத்தினையும் ஒரே தடவையில் இஸ்திரிக்கை செய்யுங்கள்.
இஸ்திரிக்கை செய்யும் போது மின்னழுத்தியின் மேற்பரப்பினை நேராக/செங்குத்தாக வையுங்கள்
காற்று பதனாக்கிகளிற்கு பதிலாக விசிறிகள்
காற்று பதனாக்கிகளிற்கு பிரதியாக விசிறிகளைப் பயன்படுத்துவதனைக் கருத்தில் கொள்ளுங்கள். விசிறிகள் மிகவும் சிறிய அளவிலான சக்தியினையே நுகர்வு செய்கின்றது. கூரை விசிறிகளை விடவும் மேசை விசிறிகளும், பீடத்திலான விசிறிகளும் சக்திச் சிக்கனம் கொண்டது. காற்று பதனாக்கி பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் முடியுமான அனைத்து நேரங்களிலும் விசிறியினைப் பயன்படுத்துங்கள். காற்று பதனாக்கி பயன்படுத்தப்படும் நேரங்கள் அனைத்திலும் யன்னல்களை மூடி வையுங்கள். காற்று பதனாக்கியின் நேரக்கணிப்பானை பயன்படுத்துங்கள். அதனை நிறுத்துவதற்கு நீங்கள் கருதிய நேரத்திலும், 30 நிமிடங்களுக்கு முன்னர் அதனை நிறுத்துவதற்குரிய செயற்பாட்டினை மேற்கொள்ளுங்கள். காற்று பதனாக்கியின் வெப்பநிலையை 26 பாகை செல்சியசுக்கு செயற்படுத்துங்கள். அதற்கு குறைந்த வெப்பநிலையெனின் அது செலவினை ஏற்படுத்தும்.
குளிர் சாதனப் பெட்டிகள் தொடர்பான சரியான கவனம்
உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் குளிரூட்டியின் வெப்பநிலையை 3 பாகை செல்சியஸ் முதல் 4 பாகை செல்சியஸிலும் உறைவிப்பானை மறை 15 பாகையிலிருந்து மறை 10 பாகை செல்சியஸ் வரையும் செயற்படுத்துங்கள். பழைய தயாரிப்பு மாதிரியெனின் வெப்பநிலை அளவினை வெப்பமானி கொண்டு அளவிடுங்கள். குளிர்சாதனப் பெட்டியின் விசிறிகளின் இடைவெளிகள் மற்றும் பின்புறம் அமைந்துள்ள சுற்றுக்கள் சுத்தமாக இருப்பதனை உறுதி செய்யுங்கள். சுற்றுக்களில் அழுக்குகள் தங்கியிருப்பது கொம்பிரஷர் கடுமையாக வேலை செய்யத் தூண்டும். இதனால் மின் நுகர்வு அதிகரிக்கும். உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் கதவுகளினது கேஸ்கெட் ( கதவினைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் பட்டி ) நல்ல நிலையிலுள்ளதா காற்று புகாதவாறு காணப்படுகின்றதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையேற்படின் அவற்றினை திருத்தி அமைக்கலாம் அல்லது மீளஒட்டுவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். அப்படியல்லாதவிடத்து உற்பத்தியாளர்களிடமிருந்து அல்லது ஹாட்வெயார் விற்பனை நிலையங்களில் இருந்து புதியதொன்றினை நீங்கள் பெறலாம். ஒன்றே கால் அங்குலம் அளவிற்கு உறைபனி படிந்ததும் அதனை அகற்றுங்கள். குளிர் சாதனப் பெட்டியினுள் காற்று சுற்றிச்செல்ல இயலுமான விதமாக பொருட்களை வையுங்கள். நீர்ப் பதார்த்தங்களை வைப்பதாயின் அதனை மூடி வையுங்கள். இதனால் ஈரப்பதன் அதிகரிப்பது தடுக்கப்பட்டு கொம்பிரஷர் கடுமையாக வேலை செய்வது தவிர்க்கப்படலாம். உங்களால் முடிந்த அளவில் குளிர்சாதனப் பெட்டிகளை மூடி வையுங்கள். குளிர் சாதனப் பெட்டியினுள் பொருட்களை வைக்கும் போது முறைமை பேணப்படின் அவைகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை துரிதமாகக் கண்டு கொள்ளலாம். “வலு சேமிப்பான்” சுவிட்ச் இருப்பின் ஈரலிப்பான நாட்களில் அதனைப் பயன்படுத்துங்கள். இந்த சுவிட்ச் “ஓன்” நிலையில் இருக்கும் போது சிறிய ஹீட்டர்கள் உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் வெளிப்பகுதியில் வியர்வைத் தன்மை ஏற்படுவதைத் தடுக்கும். ஏனைய நாட்களில் சுவிட்சினை “ஓப்” செய்து விடுங்கள். உறைநிலை உணவுகளை குளிரூட்டியில் பனி நீக்கம் செய்வது குளிர் சாதனப் பெட்டியை குளிர்மையாக வைத்திருக்கும்
வினைத்திறன் தொடர்பாக
வினைத்திறன் கொண்ட சமையல் உபகரணங்களைப் பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கர் ஒன்று சமையல் நேரத்தினை மூன்றில் இரண்டாகக் குறைக்கின்றது. மின் கனலடுப்பு (இலெக்ரிக் அவன்) ஒன்றினை விடவும் நுண்ணலை கனலடுப்பானது (மைக்ரோ வேவ்) அரைப் பகுதி மின்சாரத்தினையே நுகர்கின்றது. கனலடுப்பினை (அவன்) பயன்படுத்தும் போது பல்வேறு விதமான உணவு வகைகளை ஒரே முறையில் சமைத்துக் கொள்ளுங்கள். சமையலுக்கு வித்தியாசமான வெப்பநிலை தேவையெனின் அவற்றினை மத்தியில் வையுங்கள்.இரு முறை சமைப்பதனை விடுத்து சமையல் நேரத்தினை மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
பாத்திரங்களை மூடியவாறு சமையலை மேற்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு சில வகை உணவுகளை நாம் மூடாது சமைக்கும் போது, அது மூன்று மடங்கு சக்தியினை நுகர்வு செய்யும். சமைக்கும் போது கனலடுப்பின் மூடிகளைத் திறக்காதீர்கள். கதவினைத் திறக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூடுதலான வெப்பம் வெளியேறும்.
கைகளால் கழுவுதல் மற்றும் சக்திச் சேமிப்பிற்கான கழுவுகைச் சுற்றுகள்
மென்மையான ஆடைகளை கறை படிந்த ஆடைகளைப் போன்று கழுவுகைச் சுற்றுகள் கூடுதலாகத் தேவைப்படுவதில்லை. அனேகமான பாத்திரம் துப்பரவாக்கிகளில் சக்திச் சேமிப்பு சுற்று காணப்படுகின்றது. அது குறைந்த நீரையும் குறைந்த மின்சாரத்தினையும் நுகர்வு செய்யும். இவ் வகையான சுற்றுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிறைய சேமிக்கலாம். உங்கள் இயந்திரத்தின் திறனான செயற்பாட்டிற்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாவனையின் பின்னரும் உலர்த்தியின் பிரித்தாக்கியினை துப்பரவு செய்யுங்கள்.
பாத்திரம் துப்பரவாக்கிகளின் (Dishwasher) சிறப்புப் பாவனை
குறைந்த பொருட்களுடன், உங்கள் பாத்திரம் துப்பரவாக்கியினை இயக்க வேண்டாம். சூடான வளியூடான உலர்த்தியற்ற தன்மையூடாக 15 முதல் 50 சத வீத அளவிலான சக்தியினை சேமிக்க முடியும். நீங்கள் பழைய பாத்திரம் துப்பரவாக்கி வைத்திருப்பின், இறுதிச் சுற்று நிறைவு பெற்றவுடன் பாத்திரம் துப்பரவாக்கியினை நிறுத்தி கதவினைத் திறந்து விடுங்கள். இதன் மூலம் காற்றின் உதவியுடன் உலர்வதற்கு உதவியாக இருக்கும்.