CEB | New Customer

புதிய மின் இணைப்பு ஒன்றினை எவ்வாறு பெற்றுக்கொள்வது ?

உங்கள் மின் தேவை,  42 kVA  இற்குக் குறைந்த வீட்டு உபயோகத்திற்குரிய அல்லது மத வழிபாட்டுத்தலத்திற்கு உரியதாயின், புதிய மின் இணைப்பு ஒன்றினை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடரபாக இங்கே தரப்படுகிறது. உங்களது மின் தேவை, 42 kVA  இனை விடவும் அதிகம் எனின், தயவு செய்து உரிய மாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலக வாணிபப்பிரிவு மின் பொறியியலாளர் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மின் இணைப்பினை பெறுவதற்கு முன்னரான அறிவுறுத்தல்கள்?

    • மின் இணைப்பு மார்க்கம், மூன்றாம் தரப்பினர் ஒருவருக்குச் சொந்தமான காணிக்கு மேலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனின், அக்காணி உரிமையாளரின் எழுத்து மூலமான அனுமதி பெறப்படல் வேண்டும். அதற்கென விண்ணப்பத்துடன் படிவம் ஒன்றும் வழங்கப்படும். அவ்வாறான காணிகள் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருப்பின், அவ்வாறான ஒவ்வொரு மூன்றாம் தரப்புக் காணி உரிமையாளர்களிடமிருந்தும் வெவ்வேறாக அனுமதிப் படிவங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். இதற்குத் தேவைப்படும் மேலதிகப் படிவங்களை, விண்ணப்பதாரரிற்கு வழங்கப்பட்ட படிவத்தின் நிழல்பிரதிகளைப் பயன்படுத்தலாம். மின் சேவை மார்க்கத்தினை மூன்றாம் தரப்புக் காணிக்கு மேலாக எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கும் படிவங்கள் யாவும், பூரணப்படுத்தி உரிய பகுதி கிராம சேவகர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டு பிரதேச செயலாளரினால் அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும். மூன்றாம் தரப்புக் காணிக்கு மேலாக மின் சேவை மார்க்கம் எடுத்துச் செல்வதற்கான பொறுப்பினை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். போலி ஆவணங்கள் மற்றும் பிழையான தகவல்கள் வழங்குதல் மின் துண்டிப்புக்கு ஏதுவாகலாம். மேலும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் இழப்புக்களிற்கு இலங்கை மின்சார சபை  பொறுப்பேற்க மாட்டாது. மின் சேவை மார்க்கம் எடுத்துச் செல்லப்படும் பாதையில் மாற்றங்கள் ஏற்படின் அதற்கான கட்டணங்களை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    • நீங்கள் ( விண்ணப்பதாரர் ) மின் சேவை மார்க்கம் செல்லும் பாதையிலுள்ள மரங்கள் அல்லது கிளைகளை வெட்டி அகற்றுதல் வேண்டும். இதற்குரிய செலவுகள் மதிப்பீட்டிற்குள் உள் வாங்கப்படவில்லை. மின் இணைப்பினை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வருதற்கு முன்னர் விண்ணப்பதாரர் பாதையிலுள்ள மரங்கள் அல்லது கிளைகளை வெட்டி அகற்றும் கடமையினைச் செய்து முடித்திருத்தல் வேண்டும்.

    • கட்டிடம் ஒன்றெனின் அது நிறைவாக நிர்மாணிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதுடன் உள்ளக மின்சுற்று / மின் பொருத்துதல்கள் என்பன மின்சுற்று நிறுவுகை பிரமாணங்களுக்கு ஏற்ப நிர்மாணித்து முடிக்கப்பட்டிருத்தல் வேண்டும் (IEE 16). அனைத்து “மின் அடைப்பான்களும் (ப்ளக்)” புவித்தொடுப்பு குழாய் மூலமாக முறையாக புவித்தொடுப்பு செய்யப்ப்பட்டிருத்தல் வேண்டும். புவித்தொடுப்பு குழாயின் விட்டம் மற்றும் நீளம் என்பன ஆகக் குறைந்தது முறையே 2 அங்குலம் மற்றும் 6 அடியாக இருத்தல் வேண்டும்.

    • ‘தடக்கு ஆளி’ (trip switch) மற்றும் ‘பிரதான ஆளி’ என்பன முறையாகப் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்

    • மின் மானி பொருத்தப்படுகின்ற இடம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். இந்த இடம் கட்டிடத்திற்கு வெளியில் அமைந்து காணப்படல் வேண்டும் என்பதுடன் மானி வாசிப்பாளரினால் இலகுவாக அணுகக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மானியின் நீண்ட கால பாவனை கருதி சூரிய ஒளியின் நேரடிப் பாதிப்புக்கு உட்படாதவாறும் மழையிலிருந்து பாதுகாப்புப் பெறும் விதமாகவும்  மானி  பொருத்தப் படல் வேண்டும்.

    • மின் மானி பொருத்தப்படுவதற்காக நில மட்டத்திலிருந்து 5 அடி 6 அங்குலம் உயரத்தில் படம் 1 இல் காட்டப்பட்டுள்ளவாறு மானி பொருத்தப்படவுள்ள சுவரில் மரத்துண்டுகள் நான்கினை பொருத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

    • மானி பொருத்தப்பட்ட இருக்கின்ற இடத்திற்கு நேர் மேலாக “ L” இரும்புசட்டம் பொருத்தப்படல் வேண்டும். “L” இரும்புச்சட்டத்தின் உயர்மேற்பகுதி நிலத்திலிருந்து ஆகக்குறைந்தது 2.8 மீற்றர் உயரம் இருத்தல் வேண்டும். பிரதான வீதி ஒன்றெனின் அது 3.7 மீற்றர்களாக இருத்தல் வேண்டும். “L” இரும்புசட்டம் பொருத்துதல் தொடர்பான விபரங்களை கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

    • மானி பொருத்தப்படவுள்ள இடத்திற்கு அருகில் “நுகர்வு வடம்”  (load wire) மேலதிகமாக 1.5 அடி நீளமுடையதாக இருத்தல் வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள் யாவை ?

புதிய மின் சேவை இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, வீட்டின் அல்லது கட்டடத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளரினால் சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

    • தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது வேறு ஏதாவது அடையாளத்தினை உறுதிப்படுத்தும் ஆவணம்.

    • உங்களது மின்சாரப் பட்டியல் விநியோகம் செய்யப்படுவதில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களை தவிர்க்கும் முகமாக ( முடியுமெனின் ) நீங்கள் மின்சாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த கட்டிடத்தினை அண்மித்ததொரு கட்டிடத்தின் மின்சாரப் பட்டியலினது பிரதியொன்று விண்ணப்பத்துடன் இணைக்கப் படல் வேண்டும்.

    •  விண்ணப்பதாரரின் உரித்து மற்றும் குடியிருப்பு பற்றி உறுதி செய்து கொள்வதற்கு, கீழ்க்காணும் ஆவணங்களுள் ஏதேனும் ஒன்றினைச் சமர்ப்பித்தல் போதுமானது.

    •    உரிய இடம் தொடர்பான உறுதிப்பத்திரம்
    •    உரிய இடம் தொடர்பான வரி பற்றிய உறுதி ( Tax Deed )
    •    அரச நிறுவனம் ஒன்றினால் அனுமதிக்கப்பட்டிருப்பின் அனுமதிப் பத்திரம்
    •    சட்ட ரீதியிலான உறுதி ஆவணங்கள்
    •    மதிப்பீடு செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டு
    •    உரிய இடம் தொடர்பாக மற்றுமொரு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு (தொலைபேசி, நீர் பற்றுச் சீட்டு போன்றவைகள் )
    •    வளாகத்தின் முகவரியிடப்பட்ட வங்கிக் கூற்று 
    •    வாக்காளர் இடாப்பு அல்லது சட்டபூர் வ உரித்து அல்லது  குடியிருப்பு தொடர்பாக கிராம அலுவலரினால் விநியோகம் செய்யபட்டு பிரதேச செயலாளரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட  சான்றிதழ்
    •    உரித்து அல்லது குடியிருப்பு தொடர்பாக நிரூபிக்கும் ஏதாவதொரு ஆவணம்
    •    மின் சேவை இணைப்பிற்கு விண்ணப்பித்த இடத்தின் முகவரியினைக் கொண்ட தேசிய அடையாள அட்டை
    •    உள்ளூர் அரச நிறுவனம் ஒன்றினால் விநியோகம் செய்யப்பட்ட இயைபுச் சான்றிதழ் (COC)

விண்ணப்பிப்பது எவ்வாறு ?

    • முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மத்திய (CSC) நிலையத்தில் அல்லது இணையவழி மூலமாக சமர்ப்பியுங்கள். கட்டணங்கள் தொடர்பாக வாடிக்கையாளர் சேவை மத்திய நிலையத்தினால் செலுத்துதொகை தொடர்பான சிட்டை ஒன்று வழங்கப்படும். கொடுப்பனவுகளை மக்கள் வங்கியில் அல்லது இலங்கை மின்சார சபையின் விற்பனைக் கரும பீடத்தில் (POS) மேற்கொள்ள முடியும்.

    • மின்சார சபையினால் வழங்கப்படுகின்ற விண்ணப்பப் படிவம் விண்ணப்பதாரரினாலேயே பூரணப்படுத்தப்பட்டு கையெழுத்திடப்படல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

    • விண்ணப்பப் படிவம் இலவசமாக வழங்கப்படும்.
வார நட்களில் 09.00 – 15.00 மணி

    • விண்ணப்பப் படிவம் கையளிக்கூடிய நேரம்
வார நாட்களில் 09.00 – 15.00 மணி

இணைப்பு பெறுதலுக்கான கட்டணம்

    • விண்ணப்பப் படிவம் பூரணப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், கட்டண மதிப்பீடு ஒன்று வழங்கப்படும். கட்டண மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டதன் பின்னர், கட்டண கொடுப்பனவுகளுக்காக வாடிக்கையாளர் மத்திய நிலையத்தினால் செலுத்துதொகை தொடர்பான சிட்டை ஒன்று வழங்கப்படும். கொடுப்பனவுகளை மக்கள் வங்கியில் அல்லது இலங்கை மின்சார சபையின் விற்பனைக் கரும பீடத்தில் (POS)  மேற்கொள்ள முடியும். மின்  பட்டியல் கொடுப்பனவுகள் உட்பட எந்ததொரு கொடுப்பனவுகளையும் மிக இலகுவாக உரிய பிரதேச பொறியியலாளர் காரியாலயங்களில் திறக்கப்பட்டுள்ள காசு செலுத்தும் கரும பீடங்களில் மேற்கொள்ள முடியும்.

    • நீங்கள் இலங்கை மின்சார சபையுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறு வேண்டப்படுவீர்கள்.

    • இணைப்பு வழங்கப்படுவதற்கான காலம் அண்ணளவாக இரண்டு வாரங்கள் 

கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஏனைய விடயங்கள்

    • இலங்கை மின்சார சபையின் பிரதேச பொறியியலாளர்  அல்லது அவரின் பிரதிநிதியினால் தேவைப்படும் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த  மின்சுற்று நிறுவுகைக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் மாத்திரமே மின் சேவை இணைப்பு வழங்கப்படும். உரிய முறையில் மின்சுற்று நிறுவுகைகள் மேற்கொள்ளப்படவில்லை எனின்,  இலங்கை மின்சார சபை ஊழியர்களோ அல்லது ஒப்பந்ததாரர்களோ மின் சேவை இணைப்பினை வழங்க மாட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் முறையான மின்சுற்று நிறுவுகைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்தல் வேண்டும்.

    • மீண்டும் மீணடும் மின்சுற்று நிறுவுகைகள் பார்வையிட வருகைதருவதற்கான மேலதிகச் செலவுகளை விண்ணப்பதாரரே பொறுப்பேற்க வேண்டும். ஏதேனும் ஆபத்துக்கள் இனம் காணப்படின் மின் சேவை இணைப்பிற்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது. கட்டிடம் தீப்பற்றக் கூடிய மூலப் பொருட்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருப்பின் மின் சேவை இணைப்பு வழங்கப்பட மாட்டாது. எனவே, கட்டிடத்தின் கூரை, ஓலைக் கிடுகுகளினால் அல்லது அது போன்ற மூலப்பொருட்களினால் வேயப்பட்டிருப்பின் மின் சேவை இணைப்பு வழங்கப்பட மாட்டாது.

    • மின் சேவை இணைப்பு வழங்குதல் தொடர்பாக இலங்கை மின்சார சபை அலுவலர்களினால் அல்லது ஒப்பந்ததாரர்களினால் ஏதேனும் சர்ச்சைகள் இருப்பின் கூடிய விரைவில் அது பற்றி  மின் அத்தியட்சகருக்கு அல்லது பிரதேச பொறியியலாளருக்கு தயவு செய்து அறிவியுங்கள். நீங்கள் திங்கட்கிழமை காலை மற்றும்  புதன் கிழமை காலை நேரங்களில் தேவையான தகவல்களிற்கும்/ விசாரணைகளிற்கும் மின் அத்தியட்சகரினை அல்லது பிரதேசப் பொறியியலாளரினைச் சந்திக்க முடியும்.

    • மின் சேவை இணைப்பு வழங்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் மின் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கவில்லை எனின்  அது தொடர்பாக எழுத்து மூலமாக பிரதேச அலுவலகத்திற்கு அறிவியுங்கள் அல்லது மின் சேவை இணைப்பு வழங்கப்படும் போது இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட ஆவணங்களுடன் பிரதேச அலுவலகத்திற்குச் சமூகமளியுங்கள்

    • கைத்தொழில் ஒன்றுக்கென நீங்கள் மூநிலை மின் இணைப்பிற்கு விண்ணப்பம் மேற்கொள்வதாயின், அதற்குரிய மின் வழங்கலின் சாத்தியம் தொடர்பாக  ஆராயப்படல் வேண்டும். மின் சேவை இணைப்பு வழங்கலின் சாத்தியம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே, நீங்கள் அது தொடர்பான ஏதேனும் உபகரணங்களை கொள்வனவு செய்தல் வேண்டும்.