மின்சக்திச் செயற்திட்டத்திற்கான மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் கவரும் விடயத்தில் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் தற்போதைய ஜனாதிபதி அவர்களின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கை கட்டமைப்பினை முன்னிறுத்தி கெரவலப்பிட்டிய "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை, சொபாதனவி நிறுவனம் மற்றும் இலங்கையின் ஒன்பது உள்நாட்டு வங்கிகள் (ஹட்டன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, NDB வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, கார்கில்ஸ் வங்கி, இலங்கை வங்கி) என்பன நேற்று (ஒக்டோபர் 10) இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் தமக்கிடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
சொபாதனவி இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் தூய எரிசக்தி மூலமான LNG ஐப் பயன்படுத்தி தொழிற்படவுள்ளதுடன் பச்சை வீட்டு வாயு வெளியீட்டைக் கணிசமான அளவுக்கு குறைத்து இலங்கை அடைய எதிர்பார்க்கும் சுற்றாடல் இலக்கை அடைவதற்குப் பங்களிப்புச் செய்யும்.
மின் கட்டமைப்பின் நிலைத்தன்மையினை மேம்படுத்தி நுகர்வோருக்கு குறைந்த செலவில் தொடர்ச்சியானதும் தரமானதுமான மின்சாரத்தினை வழங்குவதற்காகவும், புதுப்பிக்கத்தக்க மின் சக்தியினை தேசிய மின் கட்டமைப்பிற்கு இணைப்பதனை அதிகரிக்கும் நோக்கிலும் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு வெளிநாட்டுக் கடன் வசதிகளைப் பெறுவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் கடன் வசதிகளை வழங்கியமைக்காக உள்நாட்டு வங்கிக் குழுமத்திற்கு இலங்கை மின்சார தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக சொபாதனவி நிறுவனமும் உள்நாட்டு வங்கிக் குழுமும் 65 பில்லியன் ரூபாவை முதலீடு செய்கின்றன.